Wednesday, January 30, 2019

Behind the Scenes (Tamil translated)

அவனை நான் இரண்டாவது முறை பார்க்கிறேன். முன்பு பார்த்த மாதிரியே இப்பொழுதும் அதே வெள்ளை கோடுகள் கொண்ட நீல நிறச் சட்டை அணிந்திருந்தான். சுமார் முப்பது வயது இருக்கலாம். அவன் முகத்தில் ஏதோ பரபரப்பு  தெரிந்தது. அவன் கையில் பள பளப்பான உருளை வடிவக்குழாய் போன்ற ஒன்றை வைத்திருந்தான். எனக்கு எதனாலோ ஒரு பயம் மனதில் ஏற்பட்டது.

இந்த நிலம் என் பாட்டன் சொத்து. என் தந்தைக்கு பிறகு எனக்கு சொந்தமானது. என் குடும்பம் இங்கிருந்து ஒரு மைல் தூரத்தில் ஒரு சிறிய ஓட்டு வீட்டில் வசிக்கிறார்கள். நானும் என்னுடைய மூத்த மகனும் சேர்ந்து செங்கல் செங்கலாக பார்த்து கட்டிய வீடு. அவன் பசு மாடுகளை பார்த்து கொண்டு எனக்கு உதவியாக இருக்கிறான். என்னுடைய மனைவி கறந்த பாலை பக்கத்துக்கு கிராமங்களுக்கு கொண்டு சென்று விற்று வருகிறாள்.

எங்கள் வீட்டைச் சுற்றி உள்ள எல்லாருமே வயலில் வேலை செய்பவர்கள் தான். சாயங்காலம் 6 மணிக்கு மேல் ஊரே அடங்கிவிடும். 8 மணிக்கு மேல் விழித்திருப்பவர்கள் மிக குறைவு. நான் தினமும் காலை 4 மணிக்கு எழுந்துவிடுவேன். தினமும் வயலில் ஏதாவது மண்ணை கொத்துவது, செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது, உரம் தெளிப்பது, களையெடுப்பது போன்ற வேலைகள். அப்புறம் சாயங்காலம் மாட்டுக்கு தண்ணி காட்டுவது, புண்ணாக்கு போடுவது, புல் கொடுப்பது, பால் கறப்பது எல்லாம். வேலை முடிந்து தினமும் கயிற்று கட்டிலில் வேப்பை மர நிழலில் உட்கார்ந்து மகன் மனைவியிடம் கம்பு கூழ் குடித்துக்கொண்டு கதை பேசுவது வழக்கம். என் சிறு வயது கதைகள், கிராமத்தில் நடந்த சண்டைகள், தேர் திருவிழா எல்லாம் கொஞ்சம் சுவாரசியம் கூட்டி நான் சொல்லிகொண்டே போவேன். பல முறை சொல்லியும் என் மகன் அப்பொழுது தான் கேட்பது போல் ஏதாவது ஒரு கேள்வி கேட்பான்.

என் வாழ்க்கை எனக்கு பிடித்திருந்தது. போதிய அளவு பணம் இருந்தது. தேவை அதிகம் இல்லாமல் நிம்மதியாக போய்க்  கொண்டிருந்தது. இது எல்லாம் அந்த நீலச் சட்டைக்காரனை பார்க்கும் வரையில். முதல் தடவை அவனை பார்த்த பொழுது அதே நிறச் சட்டை, கையில் பள பள என்று ஆயுதம் போல் ஏதோ ஒன்று வைத்திருந்தான். நான் அவனை சற்று தூரத்தில் பார்த்தேன்.  அவன் என் வயலில் அப்போது விளைந்திருந்த காய்கறிகளைப் பறித்து ஒரு கூடையில் போட்டு கொண்டிருந்தான் அவசர அவசரமாக. நான் அவனை நெருங்கி 'ஏய்' என்று சொல்வதற்குள் கூடை நிறைய காய்கறிகளுடன் வேகமாக செல்ல ஆரம்பித்தான். அவனை முன்னால் சென்று நான் மறித்தேன். அவன் என்னை முறைத்து பார்த்த பார்வையில் எனக்குள் உதறல் எடுத்தது. நான் பயந்து விலகி விட்டேன். அவன் கையில் இருந்த ஆயுதம் எனக்கு பயத்தை உண்டாக்கியது. 'ஏய் நீ யார் டா?' என்று நான் கேட்டதை அவன் அலட்சியமாக கடந்து சென்றான். கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கான விளைச்சல் அவன் கூடையில் இருந்தது.

அவன் எங்கிருந்து வந்தான் எப்படி சென்றான் என்று என்னால் சரியாக பார்க்க முடியவில்லை. அவ்வளவு வேகம்.

அன்று மாலை என் மனைவி மகனுடன் இதை சொல்லிய போது அவனை என் நண்பரின் தோட்டத்தில் ஒரு முறை பார்த்ததாக என் மகன் சொன்னான். சாப்பிட்டு முடித்தவுடன் மெதுவாக நடந்து என் நண்பரின் வீட்டுப் பக்கம் போனேன்.

'என்ன எப்படி இருக்கீங்க?' நான்.

'நல்லாருக்கேன். களப்பா இருக்கீங்க?' நண்பர் விசாரித்தார்.

பேசிக்கொண்டு இருக்கும் போது நீலச் சட்டைக்காரன் அவன் வயலிலும் வந்தது தெரிந்தது. "அடுத்த தடவை அவன் வந்த என்னைக் கூப்பிடுங்க. ஒரு கை பாத்துடலாம்" என்றார் நண்பர்.

நண்பரிடம் பேசிய சில நாட்களிலேயே மறுபடியும் அவன் நான் இருந்த இடத்தில இருந்து சற்று தொலைவில் தென்பட்டான். அவன் கையில் முன்பு பார்த்திராத ஆயுதம் ஒன்று நீண்ட கோல் போன்ற ஒன்றை வைத்திருந்தான். இரும்பினால் ஆனது போன்று இருந்தது. அவன் ஏதோ அவசரத்தில் இருந்தான். என்னுடைய தோட்டத்தில் இருந்த காய்களை பறித்து அவனுடைய கூடையில் திணித்துக் கொண்டிருந்தான். அவன் முகம் வேறு பக்கம் திரும்பியிருந்ததால் சரியாகப் பார்க்க முடியவில்லை.

நான் உடனே என் வயலின் வரப்புகளூடே ஓடி என் நண்பரின் வயல் இருந்த திசையை நோக்கி ஓடினேன். நண்பர் தூரத்தில் தென்பட்டார். விசில் அடித்து அவருக்கு அவன் இருந்த இடத்தை காட்டி சைகை செய்தேன்.

நண்பர் வந்தவுடன் மிக மெதுவாக அவனை பின்னாலிருந்து நெருங்கினோம். நாங்கள் வருவது தெரியாமல் அவன்காய்களைப் பறிப்பதில் மும்முரமாய் இருந்தான். பக்கத்தில் சென்ற போது அவன் சடாரெனத்திரும்பி என்னை அவன் அந்த பள பள ஆயுதத்தால் தாக்கினான். எனக்கு மிகவும் வலித்தது. நல்ல வேளையாக என் நண்பர் அவனைத் தாவிப்பிடுத்து அவன் அடிப்பதை தடுத்து நிறுத்தினார். இருவரும் சேர்ந்து அவன் இரு கைகளையும் பிடித்து தர தரவென்று இழுத்துக் கொண்டு அங்கிருந்த ஒரு மரத்தில் அவனைக் கட்டினோம். அவன் திமிறினான், தப்பிக்க முயன்றான். முடியாது என்று தெரிந்ததும் விட்டு விட்டான்.

"யார்ரா நீ ? எங்கிருந்து வர ?"

அவன் ஒன்றும் பேசாமல் திரு திருவென முழித்தான். நான் அவனை அடிக்க கையை ஓங்கிய போது சற்று தலையை சாய்த்து ஒரு வினோத சத்தத்தை எழுப்பினான்.தொண்டையை செருமிகிற  மாதிரி இருந்தது.

ஏதோ பேச முயற்சி செய்தது போல் இருந்தது. அப்பொழுது கண் இமைப்பதற்குள் அவன் திடீரென்று காணாமல் போனான்.

நாங்கள் இருவரும் திகைத்து நின்றோம்.


********

வெளியில் மாலை வெயில்தணிந்து இருள் சூழத்தொடங்கியது. அவள் மாடிப்படிகளில் ஏறி தன் மகனின் அறைக்குள் நுழைந்தாள். அவன் தன் முன்னாள் விரிந்த அகலமான LED மானிட்டரில் லயித்திருந்தான்.

"கடவுளே நாலு மணி நேரம் ஆச்சு இன்னுமா இந்த கேம்-அ விளையாடிட்டு இருக்க. போதும்" என்றாள்.

"இரும்மா. இன்னிக்கு..இன்னிக்கு..ஒரு சூப்பர் situation மா. இதைப் பாரு என்று மானிட்டரைக் காண்பித்தான். "என்னை இந்த farmers நார்மலா ஒன்னும் பண்ண மாட்டாங்க. பயந்து ஓடிப் போய்டுவாங்க. ஆனா இன்னிக்கு என்னைக் மரத்தில் கட்டிப்போட்டுட்டாங்க.

மானிட்டரில் ரோஹித்தின் அவதார் ஒரு மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவனைச்ச்சுற்றி அந்த இரண்டு தோட்டக்காரர்கள் கோபத்துடன் கையை நீட்டி ஏதோ பேசுவது தெரிந்தது.

"ரோஹித் நீ இந்த கேம்-க்கு addict ஆகிட்டு வர. அம்மாக்கு இது கொஞ்சம் கூட புடிக்கல. இந்த ஸ்டுபிட் minecraft கேம்-அ  uninstall பண்ணப் போறேன்" என்றாள்  அவள்.

ரோஹித் அந்த மானிட்டரையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அவள் அவன் கையை பிடித்து இழுத்தவுடன் கேம்-ஐ விட்டு வெளியேறி நிஜ உலகத்திற்கு வந்தான் ???

*********

அவள் தன் தலையில் மாட்டியிருந்த அந்த சாதனத்தை அவிழ்த்தாள். சுற்று முற்றும் பார்த்தாள். இப்பொழுது தான் தன் வீட்டின் ஹாலில் சோபாவில் உட்கார்ந்திருப்பதை  உணர்ந்தாள். ஏதோ தென்பட்டது போல எழுந்து நின்றாள். கடிகாரத்தை பார்த்தாள். 'ஓ! ரோஹித் ஸ்கூல்-ல் இருந்து வரும் நேரம்' தனக்குள் முணு முணுத்துக்கொண்டாள்.

ஒரு நிமிடம் ரோஹித் மாடியில் அந்த கேம் விளையாடிக்கொண்டிருப்பது போலவே இருந்தது. 'சே! எல்லாம் நிஜம் போலவே இருந்தது'. ரோஹித் அந்த கேம்-ல் மயங்கி எப்பொழுதும் அதையே நினைத்துக்கொண்டிருப்பது அவளை கவலை கொள்ளச் செய்திருந்தது.

"உன்னுடைய மூளையில் உள்ள மிக பலமாக ஓடும் சிந்தனை அலைகளை உள் வாங்கிக்கொண்டு அதைச்சுற்றி ஒரு கனவு உலகத்தை உருவாக்கும் இது". அவள் கணவன் தான் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய மெய்நிகர் (virtual reality) சாதனத்தை அவளுக்கு பிறந்தநாள் பரிசாக கொடுத்த போது அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.

அவள் தன் மகனை அழைத்து வரப்புறப்பட்டாள், சற்று கவலையோடு.